Testimonials

திரு.ஆ.தங்கமணி

முத்தாயிபாளையம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி.

வித்யாசாலாவில் ஒரு ஆண்டு

           கங்கையிற் புனிதமாய காவிரியின் கரையூராகத் திகழும் கொடுமுடியில் சிருங்கேரி சுவாமிகள் அருளாசியுடன் தோற்றுவிக்கப்பட்டது. நமது சங்கர வித்யா சாலா சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் ஈரோடு நகரம் தவிர வேறு எங்கும் கொங்கு நாட்டின் இந்தப்பகுதியில் ஹாஸ்டல் வசதியுடன் கூடிய உயர்நிலைப்பள்ளி இருக்கவில்லை. எனவே இங்கு வாழ்ந்த வேளாண்குடி மக்களுக்கு உயர்கல்வி பயில இது பெரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத்தில் எனது தந்தையும் அவர் சகோதரர்களும் இங்கு பயின்றவர்களே. எனது தந்தையின் உடன் பிறந்த என் அத்தையும் அவரது கணவர் வடக்குபுதுப்பாளையம் C.பெரியசாமிக்கவுண்டரும் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் தான் இவர்கள் இப்பள்ளியில் வந்து சேர காரணமாக இருந்தது. திரு.பெரியசாமிக்கவுண்டர் தன் வாழ்நாள் முழுவதும் இப்பள்ளியின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்தவர். இப்பள்ளியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த போதே இதன் செயலராகவும் இருந்து பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

              நான் 5ம் வகுப்பு இப்பள்ளியில் தான் பயின்றேன். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என்றும் என் மனத்தில் இருக்கும். 1942 ஆகஸ்டு 9 ம் நாள் ‘வெள்ளையனே வெளியேறு” என்று மகாத்மா காந்தியடிகள் அறைகூவல் விடுத்த பின் அவரும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறைப்பட்டதை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் எழுந்தன. நம் பள்ளியிலும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தோம் அப்போது பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த U.V.குமாரசாமி, V.M.பழனிசாமி போன்ற சீனியர் மாணவர்கள் ஸ்டிரைக்கை முன்னின்று நடத்தினர். கதர் கொடியை ஏந்திக்கொண்டு கொடுமுடியிலும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஊர்வலமாக வந்தோம். ‘பூனைக்கண் வெள்ளையர்கள் ஒழிக” என்ற கோஷம் இன்னும் என் காதில் ஒலிக்கின்றது. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என் நல் ஊழ் என்று நினைப்பது உண்டு.

           வணிக நோக்கம் சிறிதும் இன்றி இப்பள்ளி செயல் பட்டு வருவது பெருமைக்கு உரியதாகும். இந்தப் புனிதப் பணி தொடர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் ஆவல்.