Testimonials

Lion N.Muthusamy PMJF

Past Multiple Council Chairperson

        ந.முத்துசாமி கவுண்டர் வடக்குப்புதுப்பாளையம் . இவரது தந்தை A.M.நல்லசாமி கவுண்டர் பள்ளியின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் நமது பள்ளியில் 1960 பள்ளி இறுதி வகுப்பை முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப்பட்டமும், அரசியல் பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்று பின் பெங்களுர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். 1969 ல் ஈரோட்டில் வழக்குரைஞராக தொழில் தொடங்கி சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின் வழக்குரைஞர் தொழிலை விட்டு 1980 ல் வணிகத்துறையில் அடியெடுத்து வைத்தார் தொடர்ந்து கடந்த 35 ஆண்டுகளாக அவரது நிறுவனம் சீராக நடந்து வருகிறது. 1998 ம் ஆண்டு இந்தியன் ஜூனியர் சேம்பரின் தேசிய தலைவராக பணியாற்றினார். பின் அரிமா இயக்கத்தில் 1980 ல் இணைந்து 1990 ல் மாவட்ட ஆளுநராக தேர்வு பெற்றார். 1991ல் கூட்டு மாவட்டப் பெருந்தலைவர் பொறுப்பை வகித்தார். ஈரோட்டில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியின் தலைவராக துவக்கத்திலிருந்து இன்று வரை பொறுப்பு வகிக்கிறார். அவர் தன் பள்ளி வாழ்க்கையைப்பற்றி கீழ்க்கண்டவாறு தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

         ‘பழமையான கட்டிடம், பரந்த விளையாட்டுத்திடல் சற்று வயதான ஆசிரியர்கள், கட்டுப்பாடான சூழல், பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் ஆகியவைகளை உள்ளடக்கியது தான் நம் பள்ளி. நான் 2,3,4,5 வகுப்புகளை ஸ்ரீசங்கர வித்யாசாலா ஆரம்பப்பள்ளியில் படித்து 6ம் வகுப்பில் ஸ்ரீசங்கர வித்யாசாலா உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன் . நீண்ட அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் பாடம் கற்றேன் அவர்களில் சிலர் எனது தந்தையாருக்கே ஆசிரியராக இருந்தவர்கள் சிலர் அவருடன் படித்தவர்கள் என் தமிழ் ஆர்வத்திற்கும் , இலக்கிய ஈடுபாட்டிற்கும் தமிழாசிரியர் அருணாச்சலக் கவுண்டர் அவர்களே ஆசான். நல்ல பேச்சாளர்களை அவ்வப்போது பள்ளிக்கு அழைத்து வருவார்கள். மேடைகளிலே பேசக் கற்றது இங்கு தான். பள்ளி ஆண்டு விழாக்களில் நண்பர்களோடு சேர்ந்து நாடகங்கள் நடத்துவோம்.

      பள்ளி மாணவ,மாணவியர் எல்லோரும் இணைந்து பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடுவோம். நான் பள்ளியில் படித்த போது திரு.வெங்கடேச ஐயர், திரு.டேனியல் யேசுதாசன்,திரு கோபால்சாமி ஐயங்கார் ஆகிய 3 தலைமை ஆசிரியர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பணியாற்றினர்.

        நான் இரண்டு ஆண்டுகள் பள்ளி மாணவர் தலைவராகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போது தான் தலைமைத் திறனின் அடிப்படைக் கூறுகளை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். நினைத்தாலே இனிக்கும் நெஞ்சமெல்லாம் மணக்கும் பள்ளி நினைவுகள் இன்றும் பசுமையாகவே உள்ளன.”