வரலாறு


 03
       1910 ல் கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 40 கி.மீ அளவிலும் ஈரோடு – கரூர் இடையேயுள்ள பகுதியிலும், காங்கேயம் தெற்கு பகுதியிலும் எந்தவொரு உயர்நிலைப் பள்ளியும் இல்லை. அச்சமயத்தில் திரு.கே.எஸ்.நாராயண ஐயர் அவர்கள் கொடுமுடியில் தனது இல்லத்தில் திண்ணைப்பள்ளி நடத்தி வந்தார். 1910 பிப்ரவரி திங்கள் மூலனூர் முத்துசாமிக் கவுண்டர் அவர்கள் நாராயண ஐயர் அவர்களுக்கு உதவிக் கரம் கொடுத்து அப்பள்ளிக்கு ஸ்ரீசங்கர வித்யாசாலா என்று பெயரும் சூட்டினர். இத்தருணத்தில் ( 06.05.2015 ) நாராயண ஐயர் கிழக்கு அக்ரஹாரத்தில் உள்ள தனது இல்லத்தை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். மேலும் மூலனூர் முத்துசாமிக் கவுண்டர் அவர்களும் ஸ்ரீசங்கர வித்யாசாலா பள்ளிக்கு தானமாக நஞ்சை 1.36 ஏக்கர் நிலமும் ஒரு தார்சு கட்டிட வீடும் மூன்று கடைகளையும் அளித்தார்.
                16.05.1910 ல் ஸ்ரீசங்கர வித்யாசாலா, கொடுமுடி எனும் பெயரில் மினிட் புக் துவங்கப்பட்டது. முதல் பதிவாக திரு.நாராயண ஐயர், மூலனூர் திரு.முத்துசாமிக் கவுண்டர் கொண்ட நிர்வாகக் குழு பதிவு செய்யப்பட்டது. முதல் நிகழ்வாக நத்தம் புறம்போக்கில் பள்ளிக் கட்டிடமாக சென்டர் ஹாலும் இரு வரிசை வகுப்பறைகளும் கட்ட முடிவு செய்து பதியப்பட்டது. 24.10.1912 ல் கே.எஸ்.நாராயன ஐயரின் உடல் நலக் குறைவு காரணமாக மூலனூர் முத்துசாமிக் கவுண்டரோடு புதுப்பாளையம் ஆண்டிகாடு முத்துசாமிக் கவுண்டரும் இணைந்து பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட்டனர். நாராயண ஐயர் இறப்புக்குப்பின் அவரது கனவை நனவாக்கும் விதத்தில் மேற்கூறிய இரு பெரியவர்களும் பள்ளி நிர்வாகப் பணியினைத் தொடர்ந்தார்கள்.
                              13.03.1914ல் ‘ கொடுமுடி, எஸ்.எஸ்.வி சாலா போர்டு “ என்ற பெயர் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது. 30.01.1917 ல் திரு.சி.பெரியசாமிக்கவுண்டர் அவர்களும் மற்றும் 30 உறுப்பினர்களும் எஸ்.எஸ்.வி சாலா போர்டில் இணைந்தார்கள். திரு.சி.பெரியசாமிக்கவுண்டர் அவர்கள் 1918 லிருந்து 1985 வரை தன் வாழ்நாள் முழுவதும் பள்ளிச் செயலர் மற்றும் தாளாளராகவும் இருந்து பள்ளி நிர்வாகப் பணியாற்றினார்.
                        1918ல் இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பெருமளவு நிதி தேவைப்பட்டது எனவே நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கொடுமுடியில் இருந்த செல்வந்தர் திரு.பெரியண்ண செட்டியாரை அனுகினர். நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரு.பெரியண்ண செட்டியார் 4.76 ஏக்கர் நன்செய் பூமியை 12.12.1918ல் தானமாகக் கொடுத்தார். மேலும் இவர் பள்ளி நிவாகக்குழு உறுப்பினராகி சில ஆண்டுக்குப்பின் உபதலைவராகி 24.04.1920 ல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தம் வாழ்நாள் இறுதி வரை ( 1932 வரை ) பணியாற்றினார். தாம் தலைவராக இருந்த போது 23.04.1926 ல் தனது அசையா சொத்துக்களான 8.26 ஏக்கர் நிலமும், சிவகிரியிலுள்ள 35.58 ஏக்கர் தரிசு நிலத்தையும் பள்ளிக்கு மீண்டும் தானமாக அளித்தார்.
                    கோசகாட்டூர் திருமதி.நீலாவதி அவர்கள் 0.97 ஏக்கர் நிலமும், குட்டப்பாளையம் திருமதி.கே.எஸ்.பி.மீனாட்சியம்மாள் அவர்கள் புஞ்சை 9.98 ஏக்கர் கொளாநல்லி நிலத்தையும் பள்ளிக்கு தானமாக அளித்தார்கள். மேலும் கொடுமுடிதிரு.சி.ஜி.சாமிநாதன் அவர்கள் 2 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினார். இவர்கள் அனைவரும் நம் பள்ளி வளர்ச்சிக்கு கொடை வழங்கிய இந்நூற்றாண்டின் கொடை வள்ளல்கள் ஆவார்கள்.
                      1922 ல் பள்ளியின் மாணவர்கள் முதன் முதலாக SSLC பொதுத்தேர்வு எழுதினர். இப்பள்ளி நிர்வாகத்தின் கீழ் கொடுமுடியில் மகளிருக்கென எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப்பள்ளி 1966 ல் தொடங்கப்பட்டது. மேலும்1978ல் எஸ்.எஸ்.வி ஆண்கள் உயர்நிலைப்பள்ளியானது எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 11 மற்றும் 12 ம் வகுப்புகள் இரு பாலரும் பயிலும் வகையில் செயல்பட்டு வருகிறது.
                  1979 ம் ஆண்டு கொடுமுடியில் எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளியும், 1986 ல் சிவகிரியில் எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளியும் மற்றும் 1990 ல் கொளாநல்லியில் எஸ்.எஸ்.வி நர்சரி & பிரைமரி பள்ளியும் தொடங்கப்பட்டன.
                1989 ம் ஆண்டில் சிவகிரி பள்ளி மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது மேலும் 1994 ல் அப்பள்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
                    கொடுமுடி எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்;ளியின் கட்டிடம் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருந்தன. 1912 மற்றும் 1913 இல் சென்டர் ஹாலும் அதை ஒட்டி இரு வரிசை ஓட்டு வில்லை கட்டிடங்களும் கட்டப்பட்டன. 1930ல் கிழக்கு புறமாக உள்ள ஓட்டு வில்லை கட்டிடம் கட்டப்பட்டது. 1936 ல் வெள்ளி விழா நினைவு கட்டிடம் கட்டப்பட்டது. 1950 மற்றும் 1960 களில் வெள்ளி விழா கட்டிடத்தைச் சுற்றி உள்ள மற்ற ஓட்டு வில்லைக் கட்டிடங்கள் கட்டப்பட்டன.
                  நமது பள்ளியின் பழைய கட்டிடங்கள் அனைத்தும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் சூழ்நிலையில் இருந்தன. மேலும் அரசின் தற்போதைய விதிகளின்படி அனைத்து கட்டிடங்களும் தார்சு கட்டிடங்களாக இருக்க வேண்டும் என்பதால் 2016ம் கல்வியாண்டு துவக்கத்திற்குள் புதிய தார்சு கட்டிடம் கட்டப்படும் என்ற உறுதிமொழியின் பேரில் இப்பள்ளியானது தொடர் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது.
             
 05
02
 01
04
 07
08
 09